மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் தவறிவிட்டன - உச்ச நீதிமன்றம்
- முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை.
- நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளது.
மருத்துவமனை மருந்தகங்களில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்குமாறு நோயாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. ஆனால் மலிவு விலையில் மருத்துவ சேவை மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய மாநில அரசுகள் தவறிவிட்டன. ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை, குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த தோல்வி, தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி செய்து கொடுத்து ஊக்குவித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பொதுமக்களை சுரண்டுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக கட்டாய உத்தரவுகளை பிறப்பிப்பது நல்லதல்ல, ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தது.