இந்தியா

மகாராஷ்டிராவை உலுக்கிய பஞ்சாயத்து தலைவர் கொலை - வெளியான வீடியோக்கள் - அமைச்சர் ராஜினாமா!

Published On 2025-03-04 17:06 IST   |   Update On 2025-03-04 17:06:00 IST
  • உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.
  • குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது.

கொலை 

மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சார்பாஞ்ச்) ஆக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலையில் தொடர்புடைய உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.

தனஞ்சே முண்டே

 

பின்னணி

மசோஜோக் கிரமத்தைச் சுற்றி அமைந்த காற்றாலை கம்பெனிகளை மிரட்டி வால்மிக் கராட், கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சந்தோஷ் தேஷ்முக் எதிர்த்து வந்தார்.

இதன் பின்னணியிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வால்மிக் கராட் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.

ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருப்பவர் தனஞ்சே முண்டே. எனவே அஜித் பவார் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பொறுமை காத்தார்.

குற்றப்பத்திரிகை

ஆனால் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்பான 15 வீடியோக்கள் மற்றும் 8 புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்றில், அரை நிர்வாணமாக இருக்கும் சந்தோஷ் தேஷ்முக்கை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கியாஸ் குழாய், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது.

மற்றொரு வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியான நிலையில் இந்த கொலை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

 

 

பதவி விலகல்

எனவே இவ்விவகாரம் குறித்து முடிவு செய்ய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டினார். இதில் அஜித்பவார், சுனில் தட்கரே, தனஞ்சே முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி தனஞ்சே முண்டேயிடம் பட்நாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முண்டே தனது அமைச்சர் பதவியை இன்று (மார்ச் 04) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பதவி விலகல் குறித்து தனஞ்சே முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை "நான் மிகவும் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News