கடந்த 2 ஆண்டுகளில் 4.40 கோடி சுற்றுலா பயணிகள் வருகை: உமர் அப்துல்லா
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
- கடந்த 2 ஆண்டில் 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு உறுப்பினர் முபாரக் குலின் சுற்றுலா பயணிகள் வருகை குறித்து கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.20 லட்சம் வெளிநாட்டினர் உட்பட 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.
2023-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 2,11,24,674 சுற்றுலாப் பயணிகளும், 2024-ம் ஆண்டில் 2,35,24,629 பேரும் வருகை தந்துள்ளனர்.
இவர்களில் 2023ல் 55,337 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2024ல் 65,452 பேரும் வருகை தந்துள்ளனர்.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் சுற்றுலாத் துறையில் விளம்பரம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.35.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் ரூ.12.54 கோடியும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.22.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சுற்றுலாத் துறை விரிவான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறையின் 59 சொத்துக்கள் அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
முதல் மந்திரி அப்துல்லா சுற்றுலாத் துறையின் பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.