தரவு பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்.டி.ஐ.-யை பலவீனப்படுத்தும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டு
- தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியல், வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் என யார் பெயராக இருந்தாலும் பொதுத்தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
- தரவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இனிமேல் பெயர் வெளியிடப்படுவது தடுக்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு பலவீனப்படுத்த முனைப்பு காட்டுகிறது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "ஒரு பக்கம் கடந்த பல வருடங்களாக தவறான தகவலை அளிக்கும் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மறுபக்கம், தரவு பாதுகாப்பு சட்டம் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது.
மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பொதுத்துறைகளான ரேசர் கார்டுகள், 100 நாள் வேலை திட்டம், பொது நலத்திட்டத்தில் பயன்பெறும் மக்கள், தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் அல்லது வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய தொழில் அதிபர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பெயர் பொது இடத்தில் வெளியிப்படப்பட வேண்டும்.
ஆனால், மோடி அரசு தரவு பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்த முனைப்பு காட்டுகிறது. தரவு பாதுகாப்பு காரணமாக பெயர்கள் பொது வெளியில் வெளியிடப்படாது" என்றார்.