ரெயில்வே தேர்வில் மோசடி- 26 அதிகாரிகள் கைது
- 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
- மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முதல் சராய் பகுதியில் 3 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வினாத்தாள் நகல்களுடன் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 9 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர்தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது.
பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர்.
இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.