போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை- சுப்ரீம் கோர்ட்டு தகவல்
- ‘போக்சோ’ வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
- வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை.
புதுடெல்லி:
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்ததையொட்டி, கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அதுபற்றி விசாரணையை தொடங்கியது.
விசாரணையின்போது, எந்தெந்த மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ், 100 வழக்குகள் பதிவாகிறதோ, அங்கெல்லாம் 'போக்சோ' வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பேலா எம்.திரிவேதி கூறியதாவது:-
'போக்சோ' வழக்குகளை விசாரிக்க மாவட்ட கோர்ட்டுகளில் போதிய நீதிபதிகள் இல்லை. அதனால்தான், அவ்வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. ஆண்டுதோறும் காலியிடங்கள் உருவாகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.