அயோத்தியில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட பயங்கரவாதி கைது
- அப்துல்ரகுமான் பைசாபாத் அருகே உள்ள மில்கிபூரில் வசிப்பவர் என்று தெரியவந்தது.
- மத்திய புலனாய்வு அமைப்புகள் ரகுமானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன
பரிதாபாத்:
டெல்லியை ஒட்டி அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் பரிதாபாத் நகரில் 19 வயது வாலிபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அப்துல்ரகுமான் என்றும், பைசாபாத் அருகே உள்ள மில்கிபூரில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது.
ரகுமானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளுடன் ரகசியமாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் சம்பவத்தன்று பைசாபாத்தில் இருந்து பரிதாபாத்திற்கு ரெயிலில் வந்தார். அவரிடம் ஒரு நபர், 2 கையெறி குண்டுகளை வழங்கி உள்ளார்.
'ரகுமான், அந்த குண்டுகளை, தான் வசித்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மறைத்து வைத்து இருப்பதாகவும், அந்த குண்டுகளுடன் நேற்று ரெயிலில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும்' விசாரணையில் கூறி உள்ளார்.
இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்புகள் ரகுமானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. சதித்திட்டத்துடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி உள்ளனர்.