டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழு தேர்தலில் பாஜக வெற்றி
- பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வார் போட்டியிட்டார்.
- 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.
புதுடெல்லி:
டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழுவின் கடைசி உறுப்பினருக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் நிலைக்குழுவில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மிகவும் அதிகாரம் படைத்த அமைப்பாக இருப்பது உள்ளாட்சி நிலைக்குழு. இந்தக் குழு தான் மாநகராட்சிக்குட்பட்ட திட்டங்களை ஒதுக்கும் முடிவை எடுக்கும். மொத்தம் 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர் கமல்ஜித் ஷெராவத் லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதன் காரணமாக அந்த இடம் காலியானது.
அந்த காலியிடத்திற்கான தேர்தல் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாரும், ஆம் ஆத்மி சார்பில் கவுன்சிலர் நிர்மலா குமாரியும் போட்டியிட்டனர்.
தேர்தலில் 115 பா.ஜ.க. கவுன்சிலர்களின் ஓட்டு, அக்கட்சியின் வேட்பாளர் சுந்தர் சிங் தன்வாருக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால், இரவில் நடந்த தேர்தல் என்பதால், 125 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பெற்றிருந்த ஆம்ஆத்மியும், 9 கவுன்சிலர்களைக் கொண்ட காங்கிரசும் தேர்தலை புறக்கணித்தனர். இதன்மூலம், பா.ஜ.க. வேட்பாளர் சுந்தர் சிங் தன்வார் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இரவில் நடந்த இந்த திடீர் தேர்தலுக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால், மன்றத்தை கூட்டுவதற்கு மேயருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், மன்றம் கூடுவதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவின் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு கிடைக்காதது, புதிய முதல்வராக பொறுப்பேற்ற அதிஷிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது.