ஒரு முடிவுக்கு வாங்க.. பயங்கரவாதத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு - உமர் அப்துல்லா தாக்கு
- நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது.
- ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் பாஜக அரசால் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்குக் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பயங்கரவாதம் - அரசியல்
இந்த தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் [என்சிபி] காங்கிரஸ் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது, மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுடம் களமிறங்கியுள்ள என்சிபி - காங்கிரஸ் கூட்டணியை தனியாக களம் காணும் பாஜக, பயங்கரவாதம், பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்ட விமரிசனங்களால் தாக்கி வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு என்சிபி தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு முடிவுக்கு வாங்க
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு யார் மீது குற்றம் சுமத்துவது என்பது குறித்து அமித்ஷா முதலில் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பேசும்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என்று பாஜக பேசி வருகிறது. அதுவே ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
பயங்கரவாதத்துக்கு நாங்கள் தான் காரணம் என்று பாஜக உண்மையிலேயே நம்பினால் ஏன் பாகிஸ்தானுடன் பேச கூடாது. நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குக் காரணம் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா..
பாஜகவால் காஷ்மீர் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இளைஞர்களை காரணமின்றி கைதி செய்து காஷ்மீருக்கு வெளியில் உள்ள சிறைகளில் பாஜக அடைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக [ராகுல்] காந்தி குடும்பம், [மெகபூபா] முப்தி குடும்பம், [உமர்] அப்துல்லா குடும்பம் ஆகிய மூவரின் கையில் காஷ்மீர் சிக்கியுள்ளது என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.