வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு
- அஜித் சிங் நகர் போன்ற சில இடங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
- மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்த மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புடமேரு மற்றும் கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புடமேரு ஆற்று வெள்ளமும், கிருஷ்ணா ஆற்று வெள்ளமும் விஜயவாடா நகரை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, எலுரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் மிகவும் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் பாலங்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவில் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், தனது அரசியல் வாழ்க்கையில் மாநிலத்தில் கண்ட மிகப்பெரிய பேரழிவு என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
அஜித் சிங் நகர் போன்ற சில இடங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் வெள்ள நீர் மெதுவாக வடிந்து வருகிறது.
கிருஷ்ணா நதி மற்றும் புடமேரில் வெள்ள நீர் மெதுவாக குறைந்து வருவதாக கூறிய அவர், அடுத்த இரண்டு நாட்களில் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர மாநிலத்தின் வடக்கு பகுதியில் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்தாலும், என்டிஆர் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
32 பிரிவுகளுக்கு 32 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு 179 அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் உணவு விநியோகத்திற்காக படகுகள், டிராக்டர்கள் மற்றும் வேன்கள் போன்ற அனைத்து போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டது. அணுக முடியாத இடங்களுக்கு உணவு பொட்டலங்களை கீழே போடுவதற்கு ஆறு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.
மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், இழப்பில் இருந்து மீள மாநிலத்திற்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.