முதலமைச்சர்கள் மன்னர்கள் இல்லை: உச்சநீதிமன்றம்
- மாநில நிர்வாகத்தின் தலைவர்கள் (முதலமைச்சர்கள்) கடந்த கால மன்னர்கள் போன்று தங்களை எதிர்பார்க்க முடியாது.
- ஒரு முதலமைச்சராக, என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியுமா?
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குனராக ஐ.எஃப்.எஸ். அதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கும் உத்தரவை பிறப்பித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில முதலமைச்சர்கள் மன்னர்கள் கிடையாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
விசாரணையின்போது "இந்த நாட்டில் பொது நம்பிக்கைக் கோட்பாடு போன்ற ஒன்று உள்ளது. மாநில நிர்வாகத்தின் தலைவர்கள் (முதலமைச்சர்கள்) கடந்த கால மன்னர்கள் போன்று தங்களை எதிர்பார்க்க முடியாது. என்ன சொன்னார்களோ, அதை அவர்கள் செய்வார்கள் (கடந்த கால மன்னர்கள்). நாம் நிலப்பிரபுத்துவ காலத்தில் இல்லை. ஒரு முதலமைச்சராக, அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியுமா?" எனத் தெரிவித்தனர்.
இந்த விசாரணையின்போது, முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு செப்டம்பர் 3-ந்தேதி திரும்பப் பெறப்பட்டது என உத்தரகாண்ட் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பதைக் கவனித்த நீதிமன்றம், அந்த அதிகாரி மீது முதல்வர் ஏன் "சிறப்பு பாசம்" வைத்திருக்கிறார் என்றும் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.