இந்தியா

போபால் மத்திய சிறையில் நுழைந்த சீன டிரோன்- உயர் பாதுகாப்பை தாண்டி வந்தது எப்படி?

Published On 2025-01-10 07:56 IST   |   Update On 2025-01-10 07:56:00 IST
  • 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம்.
  • சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை.

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம். ஆனால் தற்போது 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு பன்னடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையின் பி பிளாக் கட்டிடம் அருகே சுமார் 40 கிராம் எடையுள்ள கருப்பு நிற டிரோன் கிடந்ததை, சிறை சூப்பிரண்டு ராகேஷ் குமார் பாங்க்ரே கண்டுபிடித்தார்.

இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும், நிபுணர்களும் அங்கு வந்து, அந்த டிரோனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்றி காந்தி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

உயர் பாதுகாப்பு பகுதியான சிறைச்சாலைக்குள் சீன டிரோன் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி சிறைத்துறையினர் கூறுகையில், சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. அது தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

போபால் மத்திய சிறைச்சாலைக்குள் சீன டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News