டானா புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையம் மூடல்- ரெயில்கள் ரத்து
- கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.
டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.