ரெயில் நிலைய உயிரிழப்புகள்.. இரங்கல் செய்தியில் 'கூட்டநெரிசல்' என்ற வார்த்தையை நீக்கிய டெல்லி ஆளுநர்
- கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
- 'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் குறித்து விசாரணை நடந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இரங்கல் செய்தி வெளியிட்டார். முதலில் அந்த செய்தியில் 'கூட்டநெரிசல்' என்று சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதை நீக்கி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மட்டும் மறுபதிவு செய்துள்ளார்.
அவரது திருத்தப்பட்ட எக்ஸ் பதிவில்,
'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையரிடம் பேசி நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரணப் பணியாளர்களை அனுப்புமாறு தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.
மீட்புப் படையினர் மற்றும் காவல் ஆணையர் சம்பவ இடத்தில் இருக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நான் தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல் வரியில், 'புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் குழப்பம் காரணமாகப் பல உயிர்கள் பறிபோன "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது என்று எழுதியிருந்தார்.