டெல்லி அரசின் வருவாய் உபரி ரூ.14,457 கோடியாக அதிகரிப்பு: சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி தகவல்
- டெல்லியில் 2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.
- டெல்லி மாநில அரசின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது.
டெல்லி மாநில சட்டமன்றத்தில் அம்மாநிலத்தின் நிதி மந்திரி அதிஷி பொருளாதார ஆய்வு அறிக்கையை (2023-24) தாக்கல் செய்தார். அப்போது, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற 4-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-
டெல்லி மாநிலத்தின் வருவாய் உபரி 2022-23-ல் 14,457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் வருவாய் உபரி 3,270 கோடி ரூபாயாக இருந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு மட்டும்தான் நாட்டில் வருவாய் உபரி அரசாக திகழ்கிறது.
டெல்லி மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை 2022-2023-ல் 1.9 சவீதமாக குறைந்துள்ளது. 2020-21-ல் (கொரோனாவிற்குப் பிறகு) 6.3 சதவீதமாக இருந்தது.
டெல்லியின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது. அதே காலக்கட்டத்தின் நாட்டின் பணவீக்கம் 5.65 சதவீதமாக இருந்தது.
2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 2021-22-ல் 3 லட்சத்து 76 ஆயிரத்து 217 ஆக இருந்தது. இரண்டு வருடத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய பண மதிப்பில் 2023-24-ல் 11 லட்சத்து 7 ஆயிருத்து 746 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தை காட்டிலும் 9.17 சதவீதம் உயர்வு ஆகும்.