இந்தியா

டெல்லி அரசு நிர்வாக மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை- மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

Published On 2023-08-07 16:08 GMT   |   Update On 2023-08-07 16:08 GMT
  • நாங்கள் எமர்ஜென்சியை கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவில்லை.
  • டெல்லி தொடர்பான தற்போதைய மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்குப் பதிலாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

இந்த மசோதாவானது எந்த கோணத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை என்பதற்கான ஆதாரத்தை நான் வழங்குகிறேன். டெல்லி தொடர்பான தற்போதைய மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்குப் பதிலாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 

மசோதாவின் ஒரு விதி கூட தவறாக இல்லை. ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம். டெல்லியில் பல்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன. 2015க்கு முன்பு பாஜக, காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அனைவரும் வளர்ச்சியை விரும்பினர். ஆனால் உயர் அதிகாரிகள் இடமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசுடன் ஒருபோதும் மோதலில் ஈடுபடவில்லை. ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

நாங்கள் எமர்ஜென்சியை கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவில்லை. எமர்ஜென்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க திருத்தங்களை கொண்டு வரவில்லை.

டெல்லி அரசுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஆம் ஆத்மி அரசு ஊழல் தடுப்பு துறையில் உடனடியாக இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி அரசாங்கத்தின் ஊழல்களை விசாரித்ததாலும், கலால் கொள்கை ஊழல் மற்றும் முதல்வரின் வீடு புனரமைப்பு தொடர்பான கோப்புகள் அந்த அமைப்பிடம் இருந்ததாலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டதும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி கூட்டணியான ஐ.என்.டி.ஐ.ஏ.விலிருந்து விலகுவார்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Tags:    

Similar News