இந்தியா

டெல்லி அரசு நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித் ஷா

Published On 2023-08-07 09:58 GMT   |   Update On 2023-08-07 09:58 GMT
  • ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார்.
  • சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே உள்ள அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) கொண்டு வரவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.

இந்த அவசர சட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது. இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், உள்துறை மந்திரி அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனநாயக விரோதமானது என்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Tags:    

Similar News