விவசாயிகள், தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல் காந்தி
- ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
- ஜார்க்கண்ட் மாநிலம் பக்மாரா நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பக்மாரா நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி செல்வதில்லை.
அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை. ஆனால், அம்பானி இல்ல திருமணத்துக்குச் சென்றுள்ளார்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் தாய்மார்களும், சகோதரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நரேந்திர மோடி அனைத்தையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரி கட்டமைப்பும் உள்ளது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்களாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை உள்ளன.
நாட்டின் சமூகக் கட்டமைப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.