இந்தியா
தாராவியில் ரூ.4¼ லட்சம் போலி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்- வாலிபர் கைது

தாராவியில் ரூ.4¼ லட்சம் போலி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2025-03-25 01:42 IST   |   Update On 2025-03-25 01:42:00 IST
  • போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை:

மும்பை தாராவி பகுதியில் வெளிநாட்டு பிராண்டுகளின் பெயரில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால்துறை அதிகாரிகள் தாராவி சந்த் கக்கையா மார்க், சிவசக்தி நகர் தெருவில் உள்ள குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வெளிநாட்டு காலி பாட்டில்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை நிரப்புவதை கண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைதான வாலிபர் அதேபகுதியை சேர்ந்த அனிகேத் திலிப் காசித்(வயது23) என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கும்பர்வாடா சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மகேந்திர வகேலா என்பவரிடம் தான் காலி பாட்டில்கள், லேபிள்களை பெற்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் கும்பர்வாடா பகுதிக்கு சென்று அங்குள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல்வேறு கம்பெனி பெயரில் போலியாக சீல் வைக்கப்பட்ட 33 மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், லேபிள்கள், பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதையடுத்து தலைமறைவான மகேந்திர வகேலாவை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த போலி மதுபானங்கள் மதுபிரியர்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News