ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
- உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
- நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக நேற்று அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.