இந்தியா

மேற்கு வங்காளத்தில் மந்திரிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2024-01-12 08:06 IST   |   Update On 2024-01-12 08:06:00 IST
  • நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்ததில் முறைகேடு எனப் புகார்.
  • ஏற்கனவே இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

மேற்கு வங்காள மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான மோசடி வழக்கில் தீயணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ்க்கு தொடர்புடைய இரண்டு இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபாஸ் ராய்க்கு (முன்னாள் நகராட்சி சேர்மன்) தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 6.40 மணியில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி அமைப்புகளில் முறைகேடாக வேலை வழங்கியது குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்காள அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் நகராட்சிகளில் வேலை வாய்ப்பு வழங்கியதில் முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 5-ந்தேதி உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரி ரதின் கோஷ்க்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் 17 மணி நேர சோதனைக்குப்பின் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News