இந்தியா

மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: ED அதிகாரிகள் மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு

Published On 2024-01-05 11:25 IST   |   Update On 2024-01-05 11:25:00 IST
  • நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது.
  • ஆறு பேர் கொண்ட கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

பல்வேறு புகார் அடிப்படையில் மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது. பா.ஜனதாவின் தூண்டுதல் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான இடங்களில் அதிகாரிகள் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன்தான் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இன்று மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 23 பர்கானஸ் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். கார் சண்டேஷ்காலி என்ற இடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, திடீரென ஒரு கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் இந்த சம்பவம் குறித்து கூறும்போது "8 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நாங்கள் மூன்று பேர்தான் சம்பவ இடத்தில் இருந்தோம். நாங்கள் வந்தபோது, அவர்கள் எங்களை தாக்கினர்" என்றார்.

ஏற்கனவே மத்திய அரசுக்கும் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேற்கு வங்காளத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பா.ஜனதா குற்றம்சாட்டி வரும் நிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News