மக்களவை துணை சபாநாயகர் தேர்தல்: இன்று இரவு அவசர ஆலோசனையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்
- மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
- நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பது நேற்று தொடங்கியது.
பாராளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பு புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
முதலில் பாராளுமன்ற ஆளும்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டு எம்.பி.யாக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதன் பிறகு மாநிலம் வாரியாக ஆங்கில அகர வரிசைபடி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு புதிய எம்.பி.க்கள் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். நேற்று மொத்தம் 262 பேர் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இன்று 2-வது நாளாக பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அனைத்து எம்.பி.க்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இன்று மொத்தம் 271 எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று மாலையுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதனிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
எனினும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கேரள காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னிஸ் சுரேஷ் மனுத்தால் செய்துள்ளார்.
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இரவு 8 மணிக்கு பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.