டெல்லியில் இந்து கோவில்களை இடிக்க ஆளுநர் உத்தரவு.. அதிஷி பரபரப்பு - சக்சேனா பதில்
- இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
- அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன
துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி டெல்லியில் உள்ள பல்வேறு இந்து மற்றும் பௌத்த மதக் கோவில்கள் மற்றும் கட்டமைப்புகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், நவம்பர் 22 ஆம் தேதி நடந்த மதக் குழு கூட்டத்தில் உங்கள் வழிகாட்டுதலின் பேரில் டெல்லி முழுவதும் உள்ள பல மதக் கட்டமைப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு படேல் நகர், தில்ஷாத் கார்டன், சுந்தர் நாக்ரி, சீமா புரி, கோகல் பூரி மற்றும் உஸ்மான்பூர் போன்ற பகுதிகளில் உள்ள கட்டமைப்புகள் இடடிக்கப்பட உள்ளது என்று அதஷி பட்டியலிட்டார். இவற்றில் பல கோயில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளடங்கும்,
டெல்லி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில், எந்த மத உணர்வுகளும் புண்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மதக் கட்டமைப்புகளை இடிப்பது சட்டம் ஒழுங்கின் கீழ் வருகிறது என்று கூறி, இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
மதக் குழுவின் பணியை நீங்கள் நேரடியாகக் கண்காணித்து வருகிறீர்கள். மதக் குழுவின் அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன என்று அதிஷி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, தனது முன்னோடியான அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப மலிவான அரசியல் செய்து ஆட்டம் காட்டுகிறார் முதல்வர் அதிஷி. அரசியல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே நாசவேலையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.