சோப்பு கவருக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
- போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்காண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஷிம்கஞ்ச் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.
பின்னர் வாகனத்தில் இருந்து 676 கிராம் ஹெராயின் என்கிற போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோப்பு கவர்களில் ஹெராயினை அடைத்து அவற்றை, ஸ்பீக்கர் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி எனவும், மிசோரமில் இருந்து பதர்கண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.