பாலியல் பலாத்காரம், ஆசிட் தாக்குதல் உள்ளானவர்களுக்கு சிகிச்சை மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
- பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்காதது கிரிமினல் குற்றம் என தெரிவித்தது.
- டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றது.
புதுடெல்லி:
பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மறுக்கமுடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம்.சிங். மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தது.
பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை கவனத்தில் கொண்ட டெல்லி ஐகோர்ட், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மறுக்கமுடியாது என தெரிவித்தது.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், போக்சோ வழக்கில் இருந்து தப்பியவர்கள் மற்றும் அதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பது அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ மையங்கள் ஆகியவற்றின் கடமையாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிர் பிழைத்தவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்காதது கிரிமினல் குற்றம் என்றும், அனைத்து டாக்டர்கள், நிர்வாகம், அதிகாரிகள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்படும்.
இலவச சிகிச்சையானது பாதிக்கப்பட்டவருக்கு, உயிர் பிழைத்தவருக்குத் தேவையான பரிசோதனைகள், நோயறிதல்கள் மற்றும் நீண்டகால மருத்துவப் பராமரிப்புக்கும் நீட்டிக்கப்படுகிறது. அத்தகைய பாதிக்கப்பட்டவருக்கு, உயிர் பிழைத்தவருக்குத் தேவையான உடல் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.