இந்தியா

ஜி20 அதிபர்களை வரவேற்று வாழ்த்திய ஜனாதிபதி முர்மு

Published On 2023-09-09 10:36 IST   |   Update On 2023-09-09 10:36:00 IST
  • இந்தியாவின் ஜி20 தலைமைக்கு 'வசுதைவ குடும்பகம்' என்பது மையக்கரு
  • பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்

உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

வருடாவருடம் மாறிவரும் இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பான உபசரிப்பும், தீவிர பாதுகாப்பும் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது. வருகை தந்திருக்கும் தலைவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் பல நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இந்தியா, இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் பொருள்பட வசுதைவ குடும்பகம் எனும் கருத்தை மையப்படுத்தியுள்ளது.

இதை முன்னிலைப்படுத்தி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் உலக தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மனமார வரவேற்கிறேன். இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" எனப்படும் இம்மாநாட்டிற்கான மையக்கருத்து, உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். இதனை அடைவதற்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு இந்திய ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போதைய ஜி20 தலைமையில் இந்தியா அனைவருக்குமான ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பருவகாலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் சமமான உலகளாவிய சுகாதாரம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News