இந்தியா

நிலவில் லேண்டர், ரோவர் விழித்தெழுமா?: நம்பிக்கை இழந்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Published On 2023-10-05 03:56 GMT   |   Update On 2023-10-05 03:56 GMT
  • விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.
  • இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும்.

சந்திரயான் - 3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சிவசக்தி புள்ளியில் தரை இறங்கியது. அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது. இதனால் 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீண்டும் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் உறக்க நிலையில் இருந்து ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் எழுப்பி ஆய்வில் ஈடுபட விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றனர்.

குறிப்பாக சூரியனின் கதிர்களால் லேண்டரில் உள்ள மின்கலங்கள் மின்னேற்றப்பட்டு ஏனைய ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ள விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காததால் இஸ்ரோ தனது நம்பிக்கையை இழந்து வருகிறது. குறிப்பாக, சூரியன் உதயமாகி ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில் ரோவர் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் நிலவில் சூரியன் மறைந்து மெல்ல மெல்ல அங்கே இருள் சூழ ஆரம்பித்துள்ளது. சூரியனின் வெப்பமயமாதல் இல்லாததால் அங்கு வெப்பநிலை வீழ்ச்சி அடைய தொடங்கி உள்ளது. இதனால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரும், ரோவரும் மீண்டும் எழுந்திருக்கும் என்ற விஞ்ஞானிகள் மத்தியில் இருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அஸ்தமித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. இருந்தாலும் இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும். அடுத்த 14 நாட்களும் ரோவர் கடும் குளிரை தாங்கி மீண்டும் எழ முயற்சிக்க வேண்டிய இக்கட்டில் உள்ளது. இந்த சூழ்நிலை நம்பிக்கையை இழக்கும் விளிம்பில் தங்களை நிறுத்தியுள்ளது. இந்த முயற்சியால் வெற்றிகரமான பணிகளுக்காக காத்திருக்கிறோம். தவறினால் இந்தியாவின் நிலவு தூதராக எப்போதும் இந்த லேண்டர் அங்கேயே இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

Similar News