இந்தியா

மம்தாவின் உறுதிமொழி அறிவிப்பாக வரும் வரை போராட்டம் தொடரும்: ஜூனியர் டாக்டர்கள்

Published On 2024-09-17 07:56 IST   |   Update On 2024-09-17 07:56:00 IST
  • பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
  • நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

இதற்கிடையே பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் நேற்று 36-வது நாளாக நீடித்த நிலையில், கடந்த 8 நாட்களாக மாநில சுகாதாரத்துறை அலுவலகம் முன் டாக்டர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கு திரும்புமாறு மம்மா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், டாக்டர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்குவிடுத்தார். பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் 5 நிபந்தனைகளை விதித்தனர். அவற்றில் 3 நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை நீக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தங்களின் கோரிக்கைகள் மீது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் வரை தங்களது 'பணிநிறுத்தம்' மற்றும் ஆர்ப்பாட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை பதவியில் இருந்து நீக்குவது குறித்த பானர்ஜியின் அறிவிப்பை பாராட்டிய டாக்டர்கள், இது அவர்களின் தார்மீக வெற்றி என்றும் கூறினர்.

மேலும் "முதல்வர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் வரை நாங்கள் சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் எங்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்வோம் என்றனர்.

Tags:    

Similar News