ஜனவரி 22 ராமர் கோவிலுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் - பிரதமர்
- விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 8,000 உயரதிகாரிகள் அழைப்பு.
- புதிய விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 8,000 உயரதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், தளத்தில் பணிபுரியும் 15% நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அயோத்தியில் புதிய விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கோவிலை காண நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் ஏற்கனவே வருகை தரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஜனவரி 22ம் தேதி அன்று அயோத்திக்கு வர வேண்டாம் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்," பக்தர்களாகிய நாம் ராமருக்கு எந்த பிரச்சனையும் செய்ய விரும்ப மாட்டோம். பொது மக்கள் அனைவரும் ஜனவரி 23ம் தேதி முதல் நித்தியம் வரை வரலாம்... ராமர் கோவில் இன்றும் என்றென்றும் உள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் இருந்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்" என்றார்.