குஜராத்தில் ஜோராக நடக்கும் மது விற்பனை.. வருவாய் ஈட்டும் அரசு - சட்டமன்றத்தில் கணக்கு சொன்ன முதல்வர்
- 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
- மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
1960ல் பம்பாய் மாகாணத்தில் இருந்து பிரிந்து குஜராத் மாநிலம் உருவானத்தில் இருந்து அங்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு ஆளும் பாஜக அரசு, கடந்த 2023 இல் காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் (Gandhinagar Gift City) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விருந்தினர்களுக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு அளித்தது.
இந்நகருக்கு வரும் உலகளாவிய முதலீட்டாளர்கள், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்காக இந்த தளர்வு அளிக்கப்பட்டிருந்ததது. அதன்படி இந்நகரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில் கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விற்ற மதுபானங்களின் மூலம் குஜராத் அரசு ரூ. 94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தகவலை இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு மற்றும் கலால் இலாகாவை தன்வசமே வைத்துள்ள பூபேந்திர படேல், மதுபான விற்பனைக்கு வழங்கப்பட்ட உரிமம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூபேந்திர படேல் பேசியதாவது, ஜனவரி 31, 2025 நிலவரப்படி, கிஃப்ட் சிட்டியில், 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
இங்கு மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுபான விற்பனையிலிருந்து மாநில அரசு ரூ.94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும் பூபேந்திர பாகல் தெரிவித்தார். பூரண மதுவிலக்கு அமலில் இருந்தும் வணிக நோக்கங்களை கருத்தில் கொண்டு குஜராத் அரசு வழங்கியுள்ள இந்த தளர்வும், அதன்மூலம் வருமானம் ஈட்டி வருவதும் விமரிசனத்துக்குள்ளாகி வருகிறது.