இந்தியா

அமித் ஷா மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு

Published On 2024-12-19 06:22 GMT   |   Update On 2024-12-19 12:00 GMT
  • முன்னாள் எம்.பி. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
  • பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே அண்மையில் மரணமடைந்த முன்னாள் எம்.பி.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மக்களவையும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News