பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமருக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
- பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
- பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன."
"இது தொடர்பாக கிடைத்த தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்ற தகவல் அச்சமடைய செய்கிறது. இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."
"பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."
"இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.