உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்- மம்தா பானர்ஜி
- காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர்.
- ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியை "காவி நிறமாக்கும்" முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் ஆட்சி முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். நம் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது வான்கடேவில் (மும்பையில்) நடந்திருந்தால் நாம் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நம்புகிறேன்.
அவர்கள் காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின்போது அந்த ஜெர்சிகளை அணிய வேண்டியதில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள்.
இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போதான உரையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் "துர்ரதிர்ஷ்டசாலி'' என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.