செல்லாது.. செல்லாது.. கூண்டோடு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததை ஏற்க மம்தா அரசு மறுப்பு
- உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது
- கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி .கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெண் டாகடர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் இன்னும் தீவிரத்துடன் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்க மம்தா அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர்கள் விரைந்த நீதி கிடைக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகர் ஆல்பன் பந்தோபாத்யாய், மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்வது சட்டப்படி செல்லாது.
பணியாளர் விதிகளின்படி ராஜினாமா என்பது பணியாளருக்கும் பணி வழங்குபவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். எனவே இந்த கூட்டு ராஜினாமா கடிதங்கள் செல்லாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அளித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்று தெரிவித்தார்.