இந்தியா

ராஜஸ்தானில் பயங்கரம்: காதலன் கண்முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள்

Published On 2023-07-17 15:00 IST   |   Update On 2023-07-17 15:00:00 IST
  • ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
  • தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்து தெரிவித்ததாவது:

அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இருவரும் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்திறங்கியுள்ளனர். தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து வெளியேறிய இருவரும் வேறு இடம் தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகிய 3 இளைஞர்கள் அவர்களோடு நட்பாக பழகி அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் தருவதாக கூறியிருக்கின்றனர்.

அவர்கள் அந்த இருவரையும் அதிகாலை 4 மணியளவில் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மைதானத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் காதலனை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கினர். பிறகு அந்த சிறுமியை மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். காலை நடைபயிற்சிக்காக மக்கள் வர தொடங்கியதை கண்டதும் மூவரும் ஓடி விட்டனர். பின்பு, பொது மக்களின் உதவியுடன் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காவல்துறை மோப்ப நாய், கண்காணிப்பு கேமிரா மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் பலாத்காரம் செய்த 3 நபர்கள் மற்றும் தவறாக நடக்க முயற்சித்த விடுதி மேற்பார்வையாளர் ஆகியோருக்கு எதிராக போக்சோ சட்டத்திலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

இச்சம்பவத்தையடுத்து ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

"பா.ஜ.க. இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது. குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்," என ஆளும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

அம்மூவரும் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை கூறியிருக்கிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News