மத்திய ஆயுஷ் அமைச்சகம் டிஜிட்டல் மயமாகிறது- தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்பட நடவடிக்கை.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இரு அமைச்சகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆயுஷ் கிரிட் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.