பிரியங்கா காந்தியை கவர்ந்த இண்டிகோ விமான பணிப்பெண்கள்
- அவரது பயணம் சிறப்பாக அமைந்ததை குறிக்கும் வகையில் 3 புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
- பிரியங்கா காந்தியை டுவிட்டரில் 50 லட்சம் பேர்களுக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி (51), மத்திய பிரதேச மாநில நகரான குவாலியருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். பின்னர், விமான பணிக்குழுவினரை பாராட்டி சிறப்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை செய்துள்ளார்.
குவாலியருக்கான அவரது பயணம் சிறப்பாக அமைந்ததை குறிக்கும் வகையில் 3 புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இரண்டு விமான பணிப்பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
விமான பணிப்பெண்கள் அவருக்கு சாக்லேட் சிப் குக்கீஸ் மற்றும் ஓட்ஸ், உலர்ந்த திராட்சை, தேங்காய் கொண்டு செய்யப்படும் கிரானோலா பார்களையும் வழங்கினர்.
அவர்கள் வழங்கிய பரிசுப்பெட்டியில் "அன்புள்ள திருமதி. காந்தி, இண்டிகோவில் பயணித்ததற்கு நன்றி" என எழுதப்பட்டிருந்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில் "இனிமையான இண்டிகோ பெண்களுக்கு என் நன்றி. இண்டிகோ விமான பணிக்குழுவினர் திறமையானவர்கள், பழகுவதற்கு சுகமானவர்கள் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு" என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வைரலாகியுள்ளது. பிரியங்கா சமூக வலைதளங்களில் மிகுந்த துடிப்புடன் பதிவுகளிட்டு வருபவர். டுவிட்டரில் 50 லட்சம் பேர்களுக்கு மேல் அவரை பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.