ஆட்சியில் நீடிப்பதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது: பிரியங்கா காந்தி சாடல்
- ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார்.
- சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) ஆட்சியில் இருந்தபோது, ராஜஸ்தானில் எத்தனை திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்? மோடி மற்றும் பா.ஜ.க.வின் கவனம் உங்கள்(மக்கள்) நலனில் அல்ல, மாறாக ஆட்சியில் நீடிப்பதிலும், தங்களை பலப்படுத்திக் கொள்வதிலும்தான் உள்ளது.
ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பெரும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பது அவர்களின் கொள்கையாகிவிட்டது.
ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார். கடந்த காலத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசமாட்டார்.
சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும். வளர்ச்சியை பற்றி பேசாமல் மதம், சாதி பிரச்சினைகளை ஏன் பா.ஜ.க. முன்வைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.