முக்கிய சாலையின் ஒரு பகுதிக்கு சித்தராமையா பெயரை சூட்ட முன்மொழிந்த மைசூரு மாநகராட்சி: பா.ஜ.க., ஜேடியு கண்டனம்
- MUDA ஊழலில் சிக்கிய ஊழல் முதலமைச்சரின் பெயரை அவமானம்- ஜேடியு
- துக்ளக் ஆட்சி முறையைப் பின்பற்றுபவர்களிடையே மட்டுமே இதுபோன்ற செயல்களைக் காண முடியும்- பா.ஜ.க.
கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஸ் கவுடா, மைசூரு மாநராட்சிக்கு உட்பட்ட சாலைக்கு சித்தராமையா பெயரை சூட்ட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் லட்சுமி வெங்கடராமசாமி கோவிலில் இருந்து அவுட்டர் ரிங் ரோடு ஜங்ஷன் செல்லும் கே.ஆர்.எஸ். சாலையின் ஒரு பகுதிக்கு "சித்தராமையா ஆரோக்ய மர்கா" என பெயர் வைக்கலாம் என மைசூரு மாநகராட்சி கவுன்சில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக மைசூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள நாளிதழ் விளம்பரத்தில், "கே.ஆர்.எஸ். சாலையின் ஒரு பகுதிக்கு சித்தராமையா பெயரை வைக்க முன்மொழிந்துள்ளோம். இது தொடர்பாக தங்களது கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மதசர்பாற்ற ஜனதா தளம் "மைசூர் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியம் இல்லை. காங்கிரஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், சித்தராமையாவுக்குக் கடன்பட்டிருப்பதால், சாலைக்கு சித்தராமையாவின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளனர். MUDA ஊழலில் சிக்கிய ஊழல் முதலமைச்சரின் பெயரை ஒரு சாலைக்கு வைப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூரு நகரத்திற்கு மட்டுமல்ல, முழு மாநிலத்திற்கும் துரோகம் மற்றும் அவமானம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய நிகழ்வுகள் அரசு துக்ளக் பாணியை பின்பற்றுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "மைசூரு ராஜ்ஜியம் மைசூர் மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களால் கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இவ்வளவு பெரிய அரச பரம்பரையின் பெயரிடப்பட்டுள்ள சாலைக்கு தனது பெயரை சூட்ட சித்தராமையா முயற்சிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத மைசூர் மாநகராட்சி இந்த முடிவை எடுப்பது எவ்வளவு பொருத்தமானது மற்றும் நியாயமானது இருக்கும்?.
அதிகாரத்தில் இருந்து கொண்டு தனது சொந்தப் பெயரை நிலைநிறுத்த முயலும் முதலமைச்சர், தார்மீக ரீதியாக இதை ஒரு குற்றமாக உணரவில்லையா? துக்ளக் ஆட்சி முறையைப் பின்பற்றுபவர்களிடையே மட்டுமே இதுபோன்ற செயல்களைக் காண முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.