இன்று இரவு பதவியேற்பு.. டெல்லியில் தலைவர்கள் நினைவிடங்களுக்கு விசிட் அடித்த மோடி
- மோடியுடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.
- காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர். கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.
இது மோடியின் உலகத் தலைவர் பிம்பத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் நடந்த என்.டி.ஏ கூட்டத்திலும் மோடி இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று [ஜூன் 9] இரவு 7.15 மணி அளவில் மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் நினைவிடமாக சதைவ் அடலுக்கு சென்று அதன்பின்னர் தேசிய போர் நினைவுச்சின்னம் அமைத்துள்ள இடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.