இந்தியா

பாகிஸ்தான் அணுகுண்டு வீசிவிடும்: மணிசங்கர் அய்யர் கருத்தால் புதிய சர்ச்சை- காங்கிரஸ் நழுவல்

Published On 2024-05-11 01:14 GMT   |   Update On 2024-05-11 01:14 GMT
  • பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும்.
  • அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.  அந்த வகையில் முன்னாள் மத்திய மந்திரியும், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து, அரசியல் அரங்கில் விவாதப்பொருளாகி இருக்கிறது.

அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது.

அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அது பழைய வீடியோ என்று மணிசங்கர் அய்யர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரை பார்த்தால், அது சில மாதங்களுக்கு முன்பு குளிர்காலத்தில் அளித்த பேட்டி என்று தோன்றுகிறது. பா.ஜனதாவின் பிரசாரம் எடுபடாததால், பழைய வீடியோவை தோண்டி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் தாளத்துக்கு நான் ஆட முடியாது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எனது 2 புத்தகங்களில் சரியான தகவல்கள் இருக்கின்றன. விருப்பம் இருப்பவர்கள் அதை படிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், மணிசங்கர் அய்யரின் கருத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகிக்கொண்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது:-

மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துகளில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. அதில் இருந்து முழுமையாக விலகி நிற்கிறது. பிரதமர் மோடியின் அன்றாட உளறல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, பா.ஜனதா அந்த வீடியோவை தோண்டி எடுத்துள்ளது.

மேலும், மணிசங்கர் அய்யர் காங்கிரசின் குரலாக எவ்வகையிலும் பேசவில்லை. இதுபோல், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், சீனாவை பார்த்து இந்தியா பயப்பட வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், மணிசங்கர் அய்யர் கருத்தை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா தாக்கி வருகிறது.

பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:-

பாகிஸ்தானிடம் இந்தியா பயப்பட வேண்டும், மரியாதை அளிக்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் விரும்புகிறார். ஆனால் 'புதிய இந்தியா' யாருக்கும் பயப்படாது. காங்கிரசின் உள்நோக்கம், கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை அவரது கருத்து பிரதிபலிக்கிறது.

ராகுல்காந்தி கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கும், அதன் பயங்கரவாதத்துக்கும் வக்காலத்து வாங்கும் கட்சியாகி விட்டது.

சமீபகாலமாக, காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நிற்பதாக காங்கிரஸ் கட்சி சொல்வது வாடிக்கையாகி விட்டது

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக,

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, சில வெளிநாடுகளில் உள்ள பரம்பரை சொத்து வரியை இந்தியாவில் அமல்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று பேசினார். அதை வைத்து, காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா விமர்சித்தது.

பின்னர், தென் இந்தியாவில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருப்பதாக அவர் கூறிய கருத்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதற்கும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. சாம் பிட்ரோடா தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News