இந்தியா

Live கேட்ட மருத்துவர்கள், 2 மணி நேரம் காலி சேர்களுடன் காத்திருந்த மம்தா..

Published On 2024-09-12 16:29 GMT   |   Update On 2024-09-12 16:29 GMT
  • மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
  • பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மிக கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், அதையும் ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தி இருந்தார்.

இந்த பேச்சுவார்த்கையில் கலந்து கொள்ள சம்மதித்த மருத்துவர்கள், முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், இதற்கு அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆளும் அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதோடு முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை தாங்கள் ஒருபோதும் கோரவில்லை என்றும் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். இன்றைய பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார். எனினும், மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான சந்திப்பு நடைபெறவே இல்லை.

"நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கவில்லை, அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி, எங்களது கோரிக்கைகளுடன் இங்கு வந்திருக்கிறோம்."

"எங்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News