VIDEO: பனி மூடிய இமாச்சலப் பிரதேச நகரங்கள்.. உற்சாகத்தில் மக்கள் - பிரமிப்பூட்டும் காட்சிகள்
- மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
- தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.
இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.