இந்தியா (National)

நீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்புவதா?: சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்

Published On 2024-09-20 23:17 GMT   |   Update On 2024-09-20 23:17 GMT
  • தேர்தலுக்கு பின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதுடெல்லி:

மேற்குவங்கத்தில் 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக வென்று முதல் மந்திரியாக ஆனார்.

தேர்தலுக்கு பின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணையை மேற்குவங்கத்திற்கு வெளியே மாற்றக் கோரி 2023, டிசம்பரில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அதில், மேற்குவங்க நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தால் நியாயமாக இருக்காது, சாட்சிகள் மிரட்டப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், நீதிபதிகள் கூறியதாவது:

எதன் அடிப்படையில் சி.பி.ஐ. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது?

ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் நீங்கள் எப்படி அவநம்பிக்கை கொள்ள முடியும்?

மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் விரோதமான சூழல் நிலவுவது போல் சி.பி.ஐ. கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட நீதிபதி அல்லது குறிப்பிட்ட மாநிலத்தை சி.பி.ஐ.க்கு பிடிக்காமல் போகலாம்.

அதற்காக ஒட்டுமொத்த நீதித்துறையும் செயல்பட வில்லை என கூறமுடியாது.

உங்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோர் இங்கு வந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது.

மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அவதூறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

சி.பி.ஐ. இதுபோன்ற செயலில் ஈடுபட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என காட்டமாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News