null
பிரபல மலையாள நடிகர்கள் இருவருக்கு நடிக்க தடை.. தயாரிப்பாளர் சங்கம் முடிவு
- மலையாள திரையுலகின் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி.
- இவர்கள் இருவரும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளனர்.
மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி. இவர்களில் ஷேன்நிகம், தாந்தோணி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கிஸ்மத், பூதகாலம், உல்லாசம் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இதுபோல ஸ்ரீநாத்பாசி, ஹனிபீ, கும்பளங்கி நைட்ஸ், அஞ்சாம்பாதிரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். சமீபத்தில் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் படபிடிப்புகளுக்கு ஓழுங்காக வருவதில்லை என்று படத்தயாரிப்பாளர்கள் புகார் கூறினர்.
மேலும் படபிடிப்பு தளத்தில் போதையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இதையடுத்து மலையாள பட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று கொச்சியில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் இளம்நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவருக்கும் படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ரஞ்சித் கூறும்போது, நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தொடர்ந்து படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். போதைக்கு அடிமையாகி படபிடிப்புக்கும் ஒழுங்காக வருவதில்லை. எனவே அவர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.
மலையாள திரையுலகில் சில நடிகர்கள் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அதனை போலீசாரிடம் அளிக்க உள்ளோம். திரையுலகின் நன்மைக்காகவே இதனை செய்கிறோம், என்றார்.