இந்தியா

கேரளாவில் முதன் முதலாக வாக்களிக்க காத்திருக்கும் 2,88,533 இளைஞர்கள்

Published On 2024-03-20 06:13 GMT   |   Update On 2024-03-20 06:13 GMT
  • கேரள மாநிலத்தில் மொத்தம் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதைய மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.
  • கேரள மாநிலத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் 57.75 சதவீதம் பேர் உள்ளனர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா. சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் இங்கு இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மேலும் எங்கு பார்த்தாலும் மரங்கள், செடிகள், மலைகள் என அனைத்து வளங்களும் நிறைந்து பசுமையான மாநிலமாகவும் கேரளா திகழ்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க கேரளாவில் மற்ற மாநிலங்களை போன்றே மக்களவை தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 40 நாட்கள் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் தேர்தலை எதிர்நோக்கி மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, பாலக்காடு, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலத்தூர், திருச்சூர், கோட்டயம் ஆகிய 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி கேரள மாநிலத்தில் மொத்தம் 2.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதைய மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

தேர்தலில் ஓட்டுபோட இருக்கும் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதாவது மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 1.14 கோடி வாக்காளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 50 முதல் 59 வயது வரை 50,96,910 வாக்காளர்கள்(18.80%), 60 முதல் 69 வயது வரை 36,98,157 வாக்காளர்கள் (13.64%), 70 முதல் 79 வயது வரை 19,91,143 வாக்காளர்கள் (7.34%), 50 வயதுக்கு மேல் 5,69,227 வாக்காளர்கள் (2.43%) என 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,13,55,437 பேர் உள்ளனர்.

இது மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 42.21 சதவீதம் ஆகும். இதேபோல் 40 முதல் 49 வயது வரை 58,20,433 பேர் (21.48%), 30 முதல் 39 வயது வரை 53,70,134பேர் (19.81%), 20 முதல் 29 வயது வரை 41,74,789 (15.40%) வாக்காளர்கள் இருக்கின்றனர்.

மேலும் 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 2,88,533பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கேரள மாநில மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 1.06 சதவீதமே ஆகும். இவர்கள் வருகிற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.

கேரள மாநிலத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான வாக்காளர்கள் 57.75 சதவீதம் பேர் உள்ளனர். அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 42 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதேபோல் மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 51.64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்களில் 52.11 சதவீதம் பேர் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக உள்ளனர் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை கூட இவர்கள் நிர்ணயிக்கும் நிலை இருக்கிறது.

Tags:    

Similar News