கோல்டன் குளோப் விருது: 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- ‘ஆர்ஆர்ஆர்’ குழுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
- ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைச் செய்துள்ளது.
புதுடெல்லி :
தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது.ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக பெருமைக்குரியதாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது கிடைத்திருப்பது, 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சாதனை புரிந்த 'ஆர்ஆர்ஆர்' குழுவை வாழ்த்துகிறேன். இந்த சிறப்புக்குரிய கவுரவம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைச் செய்துள்ளது' என்று கூறியுள்ளார்.
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஏற்கனவே 'கோல்டன் குளோப்' விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், 'ஆர்ஆர்ஆர்' பட நாயகர்களில் ஒருவரான ராம் சரணின் தந்தையும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரணின் தந்தையாக நடித்த இந்தி நடிகர் அஜய் தேவகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர், தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர்.