- பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.
- காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.
அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின. மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த பிரதீப்-ஜீஜா தம்பதியரின் மகன் விஷ்ணு(வயது31). கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வாலிபர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறையின் வழி காட்டுதலின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.