இந்தியா

பெரும்பான்மையினர் விருப்பப்படிதான் நாடு இயங்கும்.. ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை - வி.ஹெச்.பி. பதில்

Published On 2024-12-10 10:22 GMT   |   Update On 2024-12-10 11:06 GMT
  • பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
  • பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய ஒரு கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

'பொது சிவில் சட்டம் அரசியலமைப்பு அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றிய சேகர், இது ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தானில் (இந்தியா) வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இதுதான் சட்டம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் கேட்க முடியாது. உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது. குடும்பம் அல்லது சமூகத்தின் பின்னணியில் பாருங்கள், பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

மேலும் மதத்தை குறிப்பிடாமல் பல மனைவிகள், ஹலாலா மற்றும் முத்தலாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நடைமுறையை விமர்சித்த அவர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதிபதியின் பெரும்பான்மையினர் கருத்துக்குப் பரவலாகக் கண்டனம் எழுந்த நிலையில், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முடியாது என விஷ்வ ஹிந்து பரிஷத் [விஹெச்பி]  தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

Tags:    

Similar News